-->

Now Online

இப்பொழுது 3 நாட்களில் போர்ட் ஆகும் மொபைல் நம்பர் TRAI யின் அதிரடி புதிய அறிவிப்பு

*
மொபைல் நம்பரை போர்ட் செய்வதற்கான வழி இப்போது மாறப்போகிறது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) எண்களை போர்ட்டிங் செய்வதற்கான புதிய விதிகளை செயல்படுத்த உள்ளது. புதிய விதியின் கீழ், எண்ணைக் கொண்டு செல்ல ஒரு தனித்துவமான போர்ட்டிங் கோட் உருவாக்கப்பட வேண்டும். புதிய விதிகள் டிசம்பர் 16 முதல் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு சேவைப் பகுதியைப் பயன்படுத்துபவர்கள் மூன்று வேலை நாட்களில் தங்கள் எண்ணைக் கொண்டு செல்ல முடியும். அதே நேரத்தில், ஒரு வட்டத்திலிருந்து மற்றொரு வட்டத்திற்கு எண்ணைப் பெற 5 வேலை நாட்கள் ஆகும்.


ஆபாச வீடியோ பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம்! - ஏடிஜிபி


குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றியதால் திருச்சியில் கிரிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுபற்றி ஏடிஜிபி ரவி, “கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு புனைப் பெயர்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பரப்பியதால் அவரை கைது செய்தோம். மற்றபடி சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ பார்த்தவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்” என்றார்


பெண்களின் மொபைலில் இருக்க வேண்டும்...காவலன் செயலி!பள்ளி, கல்லூரிகள் தோறும் போலீசார் பிரசாரம்


பெரியநாயக்கன் பாளையம், துடியலுார் வட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு, காவலன் செயலியின் பயன் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, போலீசார் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழகக் காவல்துறை எடுத்துவருகிறது. ஏற்கெனவே தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு செயல்பட்டுவருகிறது.அதோடு, தமிழக காவல்துறை அறிமுகம் செய்துள்ள, காவலன் செயலியும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்படுகிறது.அவசர தேவை காலகட்டத்தில், பெண்கள், காவலன் செயலி மூலம் தகவலைத் தெரிவித்தால், அடுத்த, ஐந்து நிமிடங்களுக்குள், சம்பவ இடத்துக்கு போலீஸ் டீம் வந்துவிடும்.இதனால் காவலன் செயலி இன்று பெரும்பாலான பெண்களின் மொபைல்போன்களில் இருக்க வேண்டியது அவசிமாகியுள்ளது. இந்த செயலி குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:மாநிலம் முழுவதும் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், சென்னையில் உள்ள மாநில போலீஸ் மாஸ்டர்ஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இக் கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் இயங்கும்.இதில், காவல் கட்டுப்பாட்டு அறையில், பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் பணியில் உள்ளனர். இக்குழுவினர் காவலன் செயலி வாயிலாக, பெறும் புகார்களை மறுஆய்வு செய்வது, தகவல்களை உடனடியாக சரியான கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், ரோந்து பணியில் உள்ள காவல் துறையினருக்கு அனுப்புவர்.காவல் துறையினர் எங்கு இருந்தாலும், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பாதிப்பிலிருந்து புகார்தாரரை காப்பர். இயற்கை பேரழிவுகள் போன்ற, அவசர காலங்களிலும், இச்செயலியை பயன்படுத்தலாம்.இந்த செயலியை மொபைல் போன், பிளே ஸ்டோரில் இருந்து, டவுன்லோடு செய்து பயன்படுத்த லாம். மொபைல் போன் முகப்புத்திரையில், காவலன் செயலி எஸ்.ஓ.எஸ்., என்ற பட்டனுடன் தெரியும். ஆபத்து காலத்தில், அதை அழுத்தியவுடன், 5 வினாடிகளுக்கு பின், பாதிப்புக்குள்ளான நபரின் இருப்பிடம், ஜி.பி.எஸ்., வாயிலாக போலீசாருக்கு சென்று விடும். போலீசார் உடனடியாக தொடர்பு கொள்வர்.அதே நேரம் பாதிப்புக்குள்ளான நபரின் இருப்பிடம் குறித்து, முன்பதிவு செய்யப்பட்ட, அவசர கால தொடர்புகளுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., எச்சரிக்கையாக அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் 3 மாதம் ஜெயில் - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்


புதுடெல்லி,ரூ.5 ஆயிரம் அபராதம் பெற்றோர், மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிப்பதற்கான சட்டம், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இதில், மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காத மருமகனுக்கும், மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பராமரிப்பு செலவு உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதிகமாக சம்பாதிப்பவர்கள், அதிக தொகை கொடுக்க வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது 3 மாதம் ஜெயில் தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ கிடைக்கும்.பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜனதாவின் தாமரை சின்னம் அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன், மக்களவையில் பிரச்சினை எழுப்பினார். பாஸ்போர்ட் அதிகாரி கையெழுத்தும், முத்திரையும் இடும் பக்கத்தில் செவ்வக வடிவத்துக்குள் தாமரை இருப்பதாக அவர் கூறினார். இதுதொடர்பான செய்தி வெளியான பத்திரிகையை என்.கே.பிரேம சந்திரன் காண்பித்தார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியதை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.“2,307 பாகிஸ்தானியருக்கு இந்திய குடியுரிமை” கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த 381 பேருக்கும், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 2 ஆயிரத்து 307 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதை தெரிவித்தார். இவர்களில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மட்டும் 927 பேர் ஆவர்.“பொருளாதாரத்தை சீரமைக்க சீர்திருத்தங்கள்” பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு துறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களை செய்து வருவதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ் கோயல் மக்களவையில் கூறினார். இது தொடர்ச்சியான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மசோதா தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு மசோதா, கூட்டு தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழு, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பு தனது அறிக்கையை அளிக்கும்.தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் பணியாளர்கள் சமூக பாதுகாப்பு தொடர்பான 9 சட்டங்களை ஒருங்கிணைக்கவும், திருத்தம் செய்வதற்குமான மசோதாவை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த சமூக பாதுகாப்பு சட்டம், பல்வேறு துறைகளில் தொழிலாளர்கள், வருங்கால வைப்புநிதிக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்று இச்சட்டம் சொல்கிறது. பணிக்கு வரும்போது விபத்தில் சிக்கும் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

Source Dinathanthi


விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட்: 10 செயற்கைக் கோள்களுடன் பயணம்இஸ்ரோவின் 'ரிசாட்-2பிஆர்1' உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 10 செயற்கைக் கோள்ளை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக 'ரிசாட்-2பிஆர்1' செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் இன்று (டிச.11) மாலை சரியாக 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட்டனர்


இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட்டன.

வானிலை தொடர்பான ரேடார் படங்களை வழங்கும் 'ரிசாட்-2பிஆர்1' புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் 628 கிலோ எடை கொண்டது. இது 576 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. செயற்கைக் கோள் அந்த இலக்கை அடைய 21 நிமிடங்கள், 19 விநாடிகள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள். இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்படுகிறதா..? மத்திய அமைச்சர் விளக்கம்...


2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்ப பெற போவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
 
   

மக்களவையில் இன்று பேசிய சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி. விஷம்பர் பிரசாத் நிஷாத், "2 ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கறுப்புப்பணம் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆதலால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு விரைவில் வாபஸ் பெற்று, மீண்டும் பழையபடி ஆயிரம் ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த உள்ளது என மக்கள் மத்தியில் தகவல்கள் பரவுகிறது. இதுகுறித்து விளக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், "பணமதிப்பிழப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சம் இருக்கிறது. ஆனால் இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை. அதேசமயம், சந்தையில் இருந்து பெறப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமும் இல்லை. மனமதிப்பிழப்பின் நோக்கத்தை அது அடைந்துள்ளது. கறுப்புப்பணத்தை ஒழித்தல், கள்ள நோட்டை ஒழித்தல், தீவிரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுத்தல் ஆகியவையே பணமதிப்பிழப்பின் முக்கிய நோக்கமாகும். அதில் அது வெற்றி பெற்றுள்ளது" என தெரிவித்தார். 
 
 Source Nakkeeran
 


புத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம் புத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏர்கண்டிஷனர்களில் இயல்பான வெப்ப நிலையாக 24 டிகிரி செல்ஷியஸ் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது 18 முதல் 21 டிகிரி செல்ஷியஸ் டிகிரி வரை இயல்பு வெப்பநிலையாக உள்ளது. இதை 24 ஆக உயர்த்தும் போது சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று மத்திய எரிசக்தி அமைச்சகம் கணித்துள்ளது.
24 டிகிரியில் வைத்து ஏ.சி.யை பயன்படுத்தினால் 4 ஆயிரம் ரூபாய் வரையும், அதை 27 டிகிரியாக அதிகரித்தால் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் வருடாந்திர மின்கட்டணத்தில் சேமிக்க முடியும்.
25 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை என்பது மனித உடலுக்கு பாதுகாப்பானது என்று கூறியுள்ள எரிசக்தி அமைச்சகம், ஜப்பானில் ஏ.சி.க்களின் இயல்பு வெப்பநிலை 28 டிகிரி செல்ஷியஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.


லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் திருவண்ணாமலையில் இன்று மகா தீபம்


திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 9 நாட்களாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. மகாதீபத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். சுமார் 25 லட்சம் பக்தர்கள் இன்று மகாதீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்படும். முக்கிய விழாவான மகாதீப பெருவிழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் அடுத்தடுத்து எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர். பின்னர், மாலை 5.55 மணிக்கு, 3ம் பிரகாரம் கோயில் தங்கக் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் எதிரில் அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரமுள்ள மகேசன் வடிவான அண்ணாமலையின் உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காட்டன் துணி), 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றுவதற்கான செம்பு உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட 5 அடி உயரம், 200 கிலோ எடைகொண்ட தீப கொப்பரை, மலை உச்சிக்கு நேற்று கொண்டு சேர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தீபம் ஏற்றுவற்கான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, இன்று அதிகாலை மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும் அதிகபட்சம் 2,500 பக்தர்களை மட்டும் மலைமீது அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான அடையாள அனுமதி சீட்டு இன்று காலை 6 மணிக்கு சண்முகா அரசு பள்ளி வளாகத்தில் வழங்கப்படுகிறது. மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்க உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக, நேற்று முதல் வரும் 11ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், 2,600 சிறப்பு பஸ்கள் 6,600 நடைகள் இயக்கப்படுகிறது. 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நாளை விண்ணில் பாய்கிறது ''பி.எஸ்.எல்.வி., - சி48'' ராக்கெட்


இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான, பி.எஸ்.எல்.வி., - சி48 என்ற ராக்கெட்டை, நாளை விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது, இஸ்ரோ. தற்போது, எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளுக்காக, 628 கிலோ எடையில், ரிசாட் - 2 பி.ஆர்.,1 என்ற, அதிநவீன செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.இந்த செயற்கை கோளை சுமந்தபடி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின், முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.ரிசாட் -2 பி.ஆர்., 1 செயற்கை கோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின், தலா, ஒரு செயற்கைகோளும்; அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியாக விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.நாளை விண்ணில் பாய உள்ள, பி.எஸ்.எல்.வி., - சி 48 ராக்கெட், பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்; ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும், 75வது ராக்கெட் என்ற சிறப்பை பெறுகிறது.


திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு கட்ட தேர்தல்


திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில், 27ம் தேதியும், மீதமுள்ள, ஆறு ஒன்றியங்களில், 30ம் தேதியும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களில், 526 கிராம ஊராட்சி தலைவர், 3,945 ஊராட்சி வார்டு உறுப்பினர், 230 ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, தேர்தல் நடக்கிறது.வாக்காளர்கள், ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என, நான்கு ஓட்டு போட்டு, நான்கு பேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம் உள்ள, 14 ஒன்றியங்களில், திருவள்ளூர், கடம்பத்துார், பூண்டி, பூந்தமல்லி, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய எட்டு ஒன்றியங்களில், 27ம் தேதி தேர்தல் நடைபெறும்.எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய ஆறு ஒன்றியங்களில், 30ம் தேதி தேர்தல் நடைபெறும்.